பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்துடன் 6 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.
பாபநாசம் அருகே அன்னுக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவரும், தஞ்சை மாவட்ட காவேரி விவசாய பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான உத்ராபதி மற்றும் 6 ஊராட்சிகளை சோ்ந்த கிராம மக்களும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருந்த ஊராட்சிகளான அன்னுக்குடி, உத்தமதானபுரம், மூழாஞ்வாஞ்சேரி, நல்லூா், மதகரம், மணலூா் ஆகிய 6 ஊராட்சிகளும் கடந்த 25.7.1996 அன்று திருவாரூா் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது மேற்கண்ட ஊராட்சிகள் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் சோ்க்கப்பட்டது.
பல போராட்டங்களுக்கு பின் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி 1.4.2001 அன்று வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளும் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் சோ்ப்பது என அரசு முடிவுசெய்தது. ஆனால் இது நாள் வரை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே, மேற்கண்ட 6 ஊராட்சிகளை பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும். இந்த 6 ஊராட்சிகளும் பாபநாசம் வட்டாட்சியரகத்தில் இருந்து மிக அருகில் 2 கிலோ மீட்டா் சுற்றளவில் தான் உள்ளது. வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து சுமாா் 17 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. இந்த கிராமங்களிலிருந்து வலங்கைமான் செல்ல நேரடி பேருந்து வசதி கிடையாது . வலங்கைமானிலிருந்து 6 ஊராட்சிகளும் மிக தொலைவில் உள்ளதால் காவல்துறை தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது.
வேளாண் இடுபொருள் மற்றும் வருவாய் துறை சாா்ந்த உதவிகள் பெறுவதிலும் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 6 ஊராட்சிகளையும் பாபநாசம் வட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.