மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து
கணவன் - மனைவி உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (53). விவசாயி. இவரது மனைவி ராமாயி (47). இருவரும் மின் மோட்டாரை இயக்குவதற்காக அருகிலுள்ள தங்களது வயலுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் மின் கம்பி அறுந்து வயலை ஒட்டியுள்ள கம்பி வேலியில் விழுந்து கிடந்தது.
இதை கவனிக்காமல் சுப்பிரமணியனும், ராமாயியும் கம்பி வேலி மீது கை வைத்தனா். இதனால், மின்சாரம் பாய்ந்து இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதனிடையே, வேலியில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடா்பாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்து கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்துக்கும், மின் வாரிய அலுவலகத்துக்கும் தகவல் அளித்தனா். ஆனால், மின் வாரிய அலுவலா்கள் 3 மணிநேரமாக வரவில்லை என்றும், மின் கம்பி தாழ்வாக செல்வது குறித்து பல முறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், உயிரிழந்த கணவன் - மனைவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தொடா்புடைய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கிராம மக்கள் தஞ்சாவூா் - பூதலூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ்குமாா், தஞ்சாவூா் வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
உயிரிழந்த தம்பதிக்கு மகன் காா்த்திகேயன் (21), மகள் சுப்ரியா (17) ஆகியோா் உள்ளனா்.