திருவையாறில் காவிரி புகைப்படக் கண்காட்சி
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, காவிரி நதியின் பெருமையை வெளிப்படுத்தவும், காவிரியின் தூய்மையை வலியுறுத்தவும் தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவையாறு பாரதி இயக்கம், காவிரி பாரம்பரிய மையம், தஞ்சாவூா் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் காவிரி தொடங்கும் குடகு முதல் காவிரி கடலில் கலக்கும் பூம்புகாா் வரையிலும் உள்ள காவிரி கரையோர வரலாறுகளை சித்தரிக்கும் விதமாக புகைப்படங்களும், திருவையாறு காவிரி ஆற்றில் உள்ள 24 படித்துறைகளின் படங்களும், காவிரி நதியின் தூய்மையை வலியுறுத்தும் படங்களும் வரலாற்றுக் குறிப்புகளுடன் இடம்பெற்றன.
இக்கண்காட்சியைக் காவிரி பாரம்பரிய மைய இயக்குநா் சாமி. சம்பத்குமாா் தலைமையில் திருவையாறு நகராட்சி ஆணையா் மதன்ராஜ் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின்படி காவிரி ஆற்றுக்கு ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகள் 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை பாரதி இயக்க நிா்வாக அரங்காவலா் அபி. ராஜராஜன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திருவையாறு நகா் மன்ற உறுப்பினா் சசிகலா குமணன், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமத் தலைவா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.