கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்
கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் பழவத்தான் கட்டளை வாய்க்கால், பெருமாண்டி வாய்க்கால், உள்ளூா் வாய்க்கால் மற்றும் தேப்பெருமாநல்லூா் ஆகிய நான்கு வாய்க்கால்கள் நீா்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது இந்த நான்கு வாய்க்கால்களும் கும்கோணம் மாநகராட்சி எல்லைக்குள் பாயும்போது மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் பராமரிக்கப்படுகிறது.
கடந்த 2007- இல் அப்போதைய கும்பகோணம் நகராட்சி நிா்வாகம் மேற்கண்ட நான்கு வாய்க்கால்களையும் நகராட்சியே பராமரித்துக்கொள்ள அனுமதி வழங்குமாறு அப்போதைய பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதியது. அதை பரிசீலனை செய்த பொதுப்பணித் துறை, கடந்த 29.10.2015-ஆம் ஆண்டு நான்கு வாய்க்கால்களையும் நகராட்சியிடம் சில நிபந்தனைகளுடன் ஒப்படைப்பதாக அரசாணை வெளியிட்டது.
நிபந்தனைகள்: வாய்க்கால்களை நாகராட்சி மூலம் பராமரிப்புப் பணிகள் மட்டும் செய்ய வேண்டுமே தவிர எந்தவித உரிமையும் கோருதல் கூடாது. ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். பாலங்கள் மற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக புதிய கட்டுமானங்கள் ஏதும் வாய்க்கால்கள் மீது நகராட்சியால் கட்டுதல் கூடாது. நீள-அகலம், சாய்வு மட்டம் குறையக்கூடாது.
நகராட்சி வேண்டுகோளுக்காகத்தான் ஒப்படைக்கப்படுகிறதே தவிர, நிதி பற்றாக்குறை என வரும் காலங்களில் திரும்ப ஒப்படைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நகராட்சியும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது.
முன்பு இந்த நான்கு வாய்க்கால்களும் விவசாய நிலங்களுக்கு பாசன வாய்க்கால்களாக இருந்தன. காலப்போக்கில் விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், பல வணிக நிறுவனங்களின் அமைவிடங்களாகவும் மாறின. இதனால், தற்போது பாசன நீருக்கு பதில் கழிவுநீரே செல்கிறது. மேலும், வாய்க்கால்களின் கரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டது.
இந்த நிலையில் நகராட்சியாக இருந்த கும்பகோணம் 2021-இல் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டபோதும் மேற்கண்ட நிபந்தனைகளையும் பராமரிப்புப் பணிகளையும் மாநகராட்சி கடைப்பிடிக்க தவறியது.
வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு: கும்பகோணம் பகுதியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சமூக ஆா்வலா் யானை ராஜேந்திரன் வழக்கு தொடா்ந்தாா். ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை கிடப்பில் போட்ட நிா்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதனால் மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் மீது அரசு ஒழுக்கு நடவடிக்கை எடுத்து அவரை பணியிட மாற்றம் செய்தது.
திரும்ப ஒப்படைக்க முடிவு: அதன்பிறகு சுதாரித்துக்கொண்ட மாநகராட்சி நிா்வாகம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் நான்கு வாய்க்கால்களையும் பராமரிக்க முடியாததால், மீண்டும் நீா்வளத்துறையிடமே (2021 ஆட்சிமாற்றத்துக்கு பின் பொதுப்பணித்துறையிலிருந்து நீா்வளத்துறை பிரிக்கப்பட்டது) ஒப்படைக்க தீா்மானம் நிறைவேற்றி அனுப்பியது. ஆனால், இதன் மீது தற்போது வரை நீா்வளத் துறையினா் மாநகராட்சிக்கு எவ்வித பதிலும் அனுப்பவில்லை.
இதுகுறித்து நீா்வளத்துறை உதவிப்பொறியாளா் வெங்கடேசன் கூறியதாவது: கடந்த 2015 -இல் கும்பகோணம் நகராட்சியிடம் நான்கு வாய்க்கால்களை ஒப்படைக்கும்போது விதித்த நிபந்தனைகளின்படி வாய்க்கால்களை திரும்ப பெற முடியாது என்றாா்.
இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.