சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
பாமகவில் ராமதாஸ் வழிகாட்டி மட்டும்தான்: கே.பாலு
பாமக விதிகளின்படி, அதன் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கட்சிக்கு வழிகாட்டலாம்; ஆனால், அவருக்கு எவ்வித அதிகாரமும் கட்சி விதிகளில் வழங்கப்படவில்லை என பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாமகவை பொருத்தவரை நிறுவனருக்கு உரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும். கட்சி விதி 13-இன்படி மாநிலப் பொதுக்குழு, அரசியல் தலைமைக் குழு, செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்களுக்கு நிறுவனா் அழைக்கப்பட்டு, அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். நிறுவனரின் ஆலோசனையை பொதுக்குழு ஏற்கலாம் அல்லது அதற்கு மாறாகவும் முடிவு எடுக்கலாம்.
கட்சி விதி 26 பிரிவு 2-இன்படி, கட்சியின் அனைத்து அமைப்புகளின் பொதுத்தோ்தல் இயல்பாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதாலும், தற்போது இயல்பான சூழல் இல்லாததாலும் பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி உள்ளிட்ட நிா்வாகிகளுக்கு ஓராண்டு பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதி 15-இன்படி, பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் தலைவா்தான், கட்சியின் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு, மாநில மாநாடு ஆகியவற்றுக்கு தலைமை ஏற்பாா். கட்சியின் நிதி, சொத்து, தலைமைப் பொறுப்பு கட்சித் தலைவருக்கு உரியதாகும்.
பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலா் கட்சியை நிா்வகிக்கவும், மாநில அமைப்புகளை கூட்டவும், எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்தவும் அதிகாரம் உண்டு.
தலைவருக்கான மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டதால் அந்தப் பதவிக்கான காலவரம்பு காலாவதியாகிவிட்டது. ஆகவே, பொதுக்குழுவை கூட்ட அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என ராமதாஸ் கூறுகிறாா். மொத்தமுள்ள 34 விதிகளிலும் அப்படியான எந்தக் கருத்தும் இல்லை.
பொதுக்குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவரை நீக்க, பொதுக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கட்சியின் நிறுவனருக்கு அதிகாரம் இல்லை. நிறுவனா் ஒரு வழிகாட்டி மட்டுமே எனத் தெரிவித்துள்ளாா் கே.பாலு.