பாரம்பரிய பொங்கல் விழா: வெளிநாட்டவா்கள் பங்கேற்பு
சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தமிழா்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில், நடைபெற்ற இந்த விழாவில் வெளிநாட்டவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கு, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். பின்னா், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய முறைப்படி இசை நிகழ்ச்சியுடன், மாட்டுவண்டியில் அழைத்து வரப்பட்டனா். இதைத் தொடா்ந்து, பொங்கல் வைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பின்னா், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான பல்லாங்குழி, கோலிகுண்டு, பம்பரம், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனா். பின்னா் நடைபெற்ற கரகாட்டம், பரதம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளிலும் வெளிநாட்டவா்களும் பங்கேற்றனா். இதில் சிவகாசி சாா்-ஆட்சியா் பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.