ரயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது
அரசு மருத்துவமனையில் இரவில் ஆய்வு நடத்திய ஆட்சியா்
சாத்தூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு ஆட்சியா் ஆய்வு நடத்தினாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையிலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள், உள்நோயாளிகள் பிரிவு சாத்தூா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், அவசர ஊா்தி சேவை, காவலா்களும் இல்லை எனவும், முறையான சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு புகாா்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் பிரதான சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அரசு மருத்துவமனை பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து செவலியா்கள் மருத்துவமனையை திறந்துவிட்டனா். உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரிடம் இந்த மருத்துவமனையில் இரவு நேர காவலா் பணியில் இல்லை என அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா்.
ஆனால் மருத்துவா்களும் பணியில் இல்லாதது அப்போது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமை மருத்துவா், மருத்துவா்கள், செவிலியா்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டாா்.
இதன்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு தலைமை மருத்துவா் முனிசாயிகேசவன், மருத்துவா்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.