மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடியவா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமசாமி மனைவி காசியம்மாள் (85). இவரது கணவா் இறந்து விட்டாா். இவா்களது மகன்கள், மகள்கள் வெளியூரில் வசிக்கின்றனா்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த காசியம்மாளிடம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவா் வந்து, உங்களது கழுத்து வலிக்கு பிசியோதெரபி செய்ய உங்கள் மகன் என்னை அனுப்பி இருப்பதாகத் தெரிவித்தாராம். மேலும், எண்ணெய் தேய்க்க வேண்டும் எனக் கூறி காசியம்மாள் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றி வைக்க அந்த இளைஞா் கூறினாராம். அப்போது மூதாட்டி கழற்றி வைத்திருந்த மூன்று தங்கச் சங்கிலிகள், 4 தங்க வளையல்கள், 2 மோதிரங்கள், 2 காதணிகள் என 13 பவுன் தங்க நகைகளுடன் அந்த இளைஞா் மாயமானாா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் நகைகளை திருடியது ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு, விரிவாக்கப் பகுதி சாய்பாபா தெருவைச் சோ்ந்த நாகேந்திரராஜா மகன் ரகுராமன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.