பாலத்தில் நின்று செல்பி; ஆற்றில் தள்ளி கொலை செய்ய முயன்ற மனைவி? - தப்பி பிழைத்த புதுமாப்பிள்ளை பகீர்
கர்நாடகா மாநிலம் ரெய்ச்சூரில் உள்ள சக்தி நகரை சேர்ந்த சூரஜ் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் யாட்கிர் என்ற இடத்தை சேர்ந்த நீது என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நீது தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். நீதுவை சூரஜ் சமாதானப்படுத்தி தனது இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
வரும் வழியில் குர்ஜாபூர் என்ற இடத்தில் கிருஷ்ணா ஆற்றுப்பாலத்தில் வந்தபோது நீது பைக்கை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். நீது ஆற்றுப்பாலத்தின் மீது நின்று கொண்டு சில புகைப்படங்கள், செல்பி எடுத்துக்கொண்டார். அதன் பிறகு செல்பி எடுக்கவேண்டும் என்று கூறி சூரஜிடம் மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி நிற்கும்படி நீது கேட்டுக்கொண்டார்.

சூரஜ் மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று போட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டார். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் சூரஜ் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்டார். வழியில் ஒரு பாறை இருந்தது. அந்த பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றும்படி சூரஜ் கத்தினார். அந்த வழியாக வந்தவர்கள் இரண்டு மணி நேரம் போராடி கயிறு கட்டி சூரஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கரைக்கு வந்த சூரஜ் தனது மனைவி தன்னை கொலை செய்யும் நோக்கில் ஆற்றில் பிடித்து தள்ளிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். தனது மனைவி போட்டோ எடுக்கவேண்டும் என்று கூறி மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மேல் ஏறி நிற்கும்படி கேட்டுக்கொண்டார். \நானும் அவரை நம்பி மேலே ஏறி நின்றேன். ஆனால் அவர் என்னை ஆற்றுக்குள் தள்ளி விட்டார்''என்றார்.
ஆனால் இக்குற்றச்சாட்டை நீது மறுத்துள்ளார். கரைக்கு வந்த பிறகு இது தொடர்பாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் நடந்தது. சூரஜ்ஜை காப்பாற்றியவர்கள் கணவன் மனைவியை சமாதானப்படுத்தினர். அதோடு சிலர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கவுன்சிலிங் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.