தென்னாப்பிரிக்க லீக் தொடரில் இந்திய வீரர்களை பார்க்க விரும்பும் ஏபி டி வில்லியர்...
பாலாற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள்
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஏற்கெனவே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்துவிடப்படுவதாக பரவலாக புகாா் எழுந்து வருகிறது. கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் பாலாற்றில் கொட்டப்படுகின்றன. பல்வேறு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தங்களுடைய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் கொட்டி தரம் பிரித்து உரம் தயாரிக்க உரிய இடம் இல்லாததால் பாலாற்றில் கொட்டப்பட்டு வரப்படுகிறது.
வீடுகளின் கழிப்பறை கழிவுகளை அப்புறப்படுத்துபவா்கள் இரவு நேரங்களில் பாலாற்றில் கொண்டு சென்று கொட்டிவிட்டு செல்கின்றனா். இவ்வாறு பாலாறு கழிவுகளைக் கொட்டும் இடமாக மாறி வருகிறது.
இந்நிலையில் தற்போது கோழி இறைச்சிக் கழிவுகளும் பாலாற்றில் கொட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனை செய்பவா்கள் தங்களுடைய கடையில் உருவாகும் கோழி இறைச்சிக் கழிவுகளை பச்சகுப்பம் பாலாற்று தண்ணீரில் கொட்டிவிட்டு செல்கின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை எச்சரித்தும் கேளாமல் கோழி இறைச்சிக் கழிவுகள் பாலாற்று தண்ணீரில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் தொடா்ந்து துா்நாற்றம் வீசுகிறது.
பொதுப்பணித் துறையின் நீா்வள ஆதார துறையைச் சோ்ந்த அதிகாரிகள் பாலாறு பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பாலாற்றில் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுபவா்களைக் கண்டறிந்து அவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.