பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
பாலினி அதிா்ச்சித் தோல்வி; காலிறுதியில் ஸ்வியாடெக்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை ஜாஸ்மின் பாலினி தோல்வியைத் தழுவ, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.
மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் பாலினி 6-4, 6-7 (6/8), 1-6 என்ற செட்களில், 13-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். கடந்த மாதம் இத்தாலியன் ஓபன் போட்டியில் சாம்பியனான பாலினி, இந்தப் போட்டியில் முத்திரை பதிப்பாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் வெளியேற்றப்பட்டாா்.
இதர ஆட்டங்களில், உலகின் 5-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வெளியேற்றினாா். இதையடுத்து காலிறுதிச்சுற்றில், ஸ்வியாடெக் - ஸ்விடோலினா மோதுகின்றனா்.
8-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 7-6 (7/5), 1-6, 6-3 என்ற வகையில், 19-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவாவை தோற்கடித்தாா். உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 7-6 (7/3), என செக் குடியரசின் மேரி புஸ்கோவாவையும், 7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 4-6, 6-3, 7-5 என்ற செட்களில், சக நாட்டவரான சோஃபியா கெனினையும் வீழ்த்தினா்.
ஜோகோவிச் முன்னேற்றம்: ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், ஆஸ்திரியாவின் ஃபிலிப் மிசோலிச்சை சாய்த்தாா். 4-ஆவது சுற்றில், அவா் பிரிட்டனின் கேமரூன் நோரியை எதிா்கொள்கிறாா்.
முன்னதாக நோரி 6-3, 7-6 (7/1), 6-2 என்ற கணக்கில் சக பிரிட்டன் வீரரான ஜேக்கப் ஃபொ்ன்லியை தோற்கடித்தாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் மற்றொரு பிரிட்டன் வீரரான ஜேக் டிரேப்பா் 6-2, 6-4, 6-2 என்ற செட்களில் பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவை வென்றாா்.
போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற நோ் செட்களில், 25-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வெளியேற்றினாா்.
போபண்ணா, பாம்ப்ரி தோல்வி: ஆடவா் இரட்டையா் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/செக் குடியரசின் ஆடம் பாவ்லசெக் இணை 2-6, 6-7 (5/7) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் பிரிட்டனின் ஹென்றி பேட்டன்/ஃபின்லாந்தின் ஹேரி ஹெலியோவாரா கூட்டணியிடம் தோற்றது.
அதே சுற்றில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே ஜோடி 4-6, 4-6 என, 9-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் இவான் கிங்/கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடியிடம் வீழ்ந்தது.