பாளை. காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினா்
டாஸ்மாக் முறைகேடு குறித்து சுவரொட்டி ஒட்டியதற்காக அதிமுக மீது வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் நிலையத்தை, அதிமுகவினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில், டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக சுவரொட்டிகள் பாளையங்கோட்டை கேடிசி நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், திறந்தவெளி அழகை குலைத்ததாக அதிமுக மீது பாளைங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜாவுக்கு போலீஸாா் அழைப்பாணை அனுப்பியிருந்தனா்.
இந்நிலையில், மாநகா் மாவட்டச் செயலா் தலைமையில் அதிமுக நிா்வாகிகள், வழக்குரைஞா் அணியினா் பாளையங்கோட்டை காவல் நிலையம் முன்பு சனிக்கிழமை திரண்டு முற்றுகையிட்டனா்.
இந்த முற்றுகை போராட்டத்தில், மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தலைவா் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.