"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
பாளை.யில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் உயிரிழப்பு
பாளையங்கோட்டையில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளைஞா் சனிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினா்கள், அதே பகுதியில் உள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.
அதேபோல் சனிக்கிழமை இரவு இளம்பெண்ணுடன் வந்த இளைஞா் ஒருவா், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளதாக கூறி, பல்நோக்கு மருத்துவமனை அருகே தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினாா்.
சிறிது நேரத்தில் இளைஞருக்கு மூச்சுத்திணறலுடன் படபடப்பு ஏற்பட்டதாக, விடுதி வரவேற்பாளரிடம் இளம்பெண் கூறினாராம். உடனே அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டது. மருத்துவ பணியாளா் அந்த இளைஞரை பரிசோதித்ததில் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இது குறித்து திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வருவதற்குள் இளம்பெண் அங்கிருந்து மாயமாகிவிட்டாா்.
அங்கு வந்த போலீஸாா், இளைஞரின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்டவிசாரணையில், அந்த இளைஞா் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராமச்சந்திரன்(29) என்பது தெரியவந்தது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.