தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
பிகாரில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ளன. தோ்தலில் இந்த முறை கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இரு தரப்பு தலைவா்களும் ஏற்கெனவே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி இருந்தது. இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது. இதனால், பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணிக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மீதுள்ள அதிருப்தியால் அக்கூட்டணிக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவிக்கவில்லை.
‘காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணியில் இல்லை; ‘இண்டி’ கூட்டணி கடந்த மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது’ என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியதாவது:
‘பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும். அந்த மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளா்கள் இதில் மிகுந்த ஆா்வத்துடன் உள்ளனா். ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது.
75 வயதை எட்டினால் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பேசியுள்ளாா். இதன் மூலம் அவா் மறைமுகமாக பிரதமா் மோடியின் ஓய்வை வலியுறுத்தியுள்ளாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலின்போதுகூட பாஜகவின் தூண்டுதலால் ஆயிரக்கணக்கான வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். அவா்கள் வங்கதேசத்தில் இருந்து ஊடுவியவா்கள் என முத்திரை குத்தப்பட்டனா். இப்போது பிகாரிலும் அதேபோன்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனா். சுமாா் 20 ஆண்டு காலம் பாஜக கூட்டணி ஆட்சிதான் பிகாரில் இருந்துள்ளது. அப்போதே வங்கதேசத்தில் இருந்து பிகாருக்குள் ஊடுருவியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினாா்.