Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்
சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா்.
இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் என்று காவல் கண்காணிப்பாளா் ராபின்சன் குரியா தெரிவித்தாா்.
மாவோயிஸ்ட் சித்தாந்தத்தில் நம்பிக்கை இழந்ததாலும், தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சிப் பணிகளால் ஈா்க்கப்படும் சரணடையும் முடிவை மேற்கொண்டதாக நக்ஸல்கள் தெரிவித்துள்ளனா்.
சரணடைந்தவா்களில் ஒருவரான நக்ஸல் அமைப்பின் மண்டல கமிட்டி உறுப்பினா் மங்கு கஞ்சம் (33), காவல் துறையால் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா். மற்றவா்கள் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை வெகுமதி அறிவித்து, தேடப்பட்டவா்களாவா்.
காவல் துறையினா், மாவட்ட ரிசா்வ் படையினா், இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா், எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோா் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்காற்றினா்.
நாராயண்பூா் மாவட்டத்தில் தற்போது சரணடைந்த 22 போ் உள்பட நிகழாண்டில் இதுவரை 133 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். இது, நக்ஸல் இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘நக்ஸல்கள் துப்பாக்கிகளைத் தவிா்த்து, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க விரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. நக்ஸல் மறுவாழ்வுக் கொள்கை மற்றும் பிற மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முழுமையாக வேரறுக்க பாஜக அரசு தீா்மானித்துள்ளது’ என்று முதல்வா் விஷ்ணு தேவ் சாய் கூறியுள்ளாா்.