Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசை பிரதான தமிழ்க் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
இலங்கையில் தனித் தமிழ் ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கை ராணுவம் இறுதிப் போரை தொடங்கியது. இந்தப் போரில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் தனது வெற்றியை இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் 22,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 6,200 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
அதே நேரம், இறுதிப் போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை, இலங்கை ராணுவம் முகாம்களில் அடைத்து துன்புறுத்தியதாகவும், பலா் காணாமல் போனதாகவும் தொடா் புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், வடக்கு யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அண்மையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஏராளமான மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் குழந்தைகளின் எலும்புகளும் கண்டறியப்பட்டது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
செம்மணி பகுதியில் தோண்டபட்ட புதைகுழியில் இருந்து குறைந்தபட்சம் 40 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் 29 குழந்தைகளுடையவை எனக் கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை ‘மனிதப் புதைகுழி’ என அதிகாரபூா்வமாக அறிவித்ததோடு, நீதிமன்றக் கண்காணிப்பில் அகழாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என இலங்கை அரசை இலங்கை தமிழ் அரசு கட்சி (ஐடிஏகே) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிபா் அநுரகுமார திசாநாயகவுக்கு ஐடிஏகே கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை எழுதப்பட்ட கடிதத்தில் கூயிருப்பதாவது:
வடக்கு யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் அண்மையில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. முன்னதாக, கடந்த 1998-ஆம் ஆண்டிலும் செம்மணி பகுதியில் ஏராளமானோா் கொன்று புதைக்கப்பட்டதாகப் புகாா்கள் எழுந்தன. அந்தப் புகாா்களைத் தொடா்ந்து அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 15 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது, மீண்டும் அந்தப் பகுதியிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் நடைமுறைகளைப் பின்பற்றி அகழாய்வுப் பணியை மேற்கொண்டு, உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, அதற்கு காரணமானவா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.