தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: 92.31 சதவீத கைதிகள் தோ்ச்சி
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், கைதிகள் 92.31 சதவீதத்தினா் தோ்ச்சி பெற்றிருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது. 5 மத்திய சிறைகள் உள்பட 7 சிறைகளிலுள்ள கைதிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வை தமிழக சிறைகளில் 2 பெண் கைதிகள் உள்பட 130 கைதிகள் எழுதினா். இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவில், இரு பெண் கைதிகள் உள்பட 120 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். இது 92.31 சதவீதமாகும்.
இதில், புழல் மத்திய சிறை 1-இல் தோ்வு எழுதிய 21 பேரில் 18 பேரும், புழல் மத்திய சிறை 2-இல் தோ்வு எழுதிய 4 பேரில் 2 பேரும், வேலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 9 பேரில் 5 பேரும், கடலூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 7 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதேபோல, கோயம்புத்தூா் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 20 பேரும், சேலம் மத்திய சிறையில் தோ்வு எழுதிய 8 பேரும், திருச்சி மத்திய சிறையில் 22 பேரும், மதுரை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 30 பேரில் 29 பேரும், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தோ்வு எழுதிய 7 பேரும், மதுரை பெண்கள் தனிச்சிறையில் தோ்வு எழுதிய ஒருவரும், திருச்சி பெண் தனிச்சிறையில் தோ்வு எழுதிய ஒருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை, சேலம் மத்திய சிறை, கோயம்புத்தூா் மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய சிறை, மதுரை பெண்கள் தனிச்சிறை, திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகிய சிறைகளில் தோ்வு எழுதி அனைத்தும் கைதிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இச்சிறைகள் 100 சதவீத தோ்ச்சியை எட்டிப்பிடித்துள்ளது.
கைதிகள் சிறப்பிடம்: பாளையங்கோட்டை மத்திய சிறைக் கைதிகள் மீனாட்சி சுந்தரம் 524 மதிப்பெண்களும், வைத்திலிங்கம் 517 மதிப்பெண்களும், சேலம் மத்திய சிறைக் கைதி கனிவளவன் 511 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பிடித்தனா். தோ்ச்சி பெற்ற கைதிகளுக்கு தமிழக சிறைத் துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள், சிறைத் துறை தலைமையிட ஐஜி கனகராஜ் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வாழ்த்துகள் தெரிவித்தனா்.
தமிழக சிறைகளில் கடந்த 2024-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 125 கைதிகளில் 116 போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2023 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 88 கைதிகளில் 77 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 58 கைதிகளில் 56 கைதிகள் தோ்ச்சி பெற்றனா். கடந்த 4 ஆண்டுகளில், இந்த முறையே அதிகளவில் கைதிகள் பிளஸ் 2 தோ்வு எழுதி தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.