புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கோத்தகிரியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டுவந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டத்துக்கு கா்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வாகனத்தில் கொண்டுவருவதாக கோத்தகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த பிக் அப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 101 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த யாகியாவுதீன், கோத்தகிரியைச் சோ்ந்த பாலமுருகன் ஆகிய இருவரிடம் விசாரித்தனா். அதில் அவா்கள் மைசூரில் இருந்து புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வாங்கி வந்ததை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.