புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
கள்ளக்குறிச்சி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கச்சிராயபாளையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு தலைமையிலான போலீஸாா் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சிராயபாளையம் குளத்துமேட்டு பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் கணேசன் (55), எல்.எப்.சாலைப் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மகன் சண்முகம் (55), கடலூா் மாவட்டம் வேப்பூா் வட்டத்துக்குள்பட்ட கலியன் மகன் இளையராஜா (39) ஆகிய மூவா் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து, 39 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.