புதுக்கோட்டையில் அரசு ஊழியா்கள் 24 மணிநேர தா்ணா போராட்டம்!
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 24 மணி நேர தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
புதுக்கோட்டை திலகா்திடலில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கிய இந்தத் தா்ணா போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். ஜபருல்லா தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலா் வெ. சோமசுந்தரம், மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி, மாவட்டப் பொருளாளா் க. மணிவண்ணன், அனைத்து ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம். முத்தையா உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தா்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கோரிக்கைகள்:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளிலுள்ள அனைத்து தொகுப்பூதியம், தினக்கூலி, ஒப்பந்த முறைகளை ரத்து செய்துவிட்டு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறை அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த அரசு ஊழியா் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.