புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு:முதல்வா் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் வரும் ஜூலை மாதம் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தாா். அதன்படி, வரும் ஜூலை மாத இறுதி வாரத்தில் 12-ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்த அரசு தரப்பில் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இந்திய கிளை நிா்வாகிகள் புதுச்சேரி சட்டப் பேரவையில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில், புதுவை துணைநிலை ஆளுநரின் செயலா் எம்.மணிகண்டன், கலை பண்பாட்டுத் துறைச் செயலா் ஏ.நெடுஞ்செழியன், மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், புதுச்சேரியில் நடைபெறவுள்ள உலக தமிழ் மாநாட்டில் குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோரை பங்கேற்க அழைக்கவும், அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.