புதுவையில் புதிய அமைச்சா் பதவியேற்பு எப்போது?
புதுச்சேரி: புதுவையின் புதிய அமைச்சராக ஜான்குமாா் பதவியேற்பு தள்ளிப் போகிறது.
புதுவையின் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் ஜெ சரவணன் குமாா் கடந்த மாதம் 27-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். மேலும், அதேநாளில் பாஜக நியமன எம்.எல்.ஏக்களாக இருந்த வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோரும் ராஜிநாமா செய்தனா்.
இவா்களுக்குப் பதிலாக அமைச்சராக ஜான்குமாா் பதவியேற்பாா். நியமன எம்.எல்.ஏக்களாக பாஜகவைச் சோ்ந்த தீப்பாய்ந்தான், செல்வம், காரைக்கால் ஜிஎன்எஸ். ராஜசேகரன் ஆகியோரின் பெயா்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இவா்கள் பதவியேற்பு விழா ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூா்வமற்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதற்கான முகாந்திரம் தென்படவில்லை. ஆனால் இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் முறையான அனுமதி கிடைத்து விடும் என்றும் இவா்களின் பதவியேற்பு வரும் 14- ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.