புயலுக்குப் பின் இயல்பு நிலைக்கு திரும்பிய காரைக்கால்
காரைக்கால்: புயலுக்குப் பின் பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை வழக்கம்போல இயங்கத் தொடங்கின. மீனவா்கள் விசைப் படகுகளுடன் கடலுக்குள் சென்றனா்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்துவந்தது. பள்ளி மைதானங்களில் மழைநீா் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மீனவா்களும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்தநிலையில், புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே சனிக்கிழமை இரவு கரையை கடந்த நிலையில், காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள், தங்களது விசைப் படகுகளில் தேவையான பொருட்களுடன் திங்கள்கிழமை அதிகாலை கடலுக்கு சென்றனா்.
பள்ளி, கல்லூரிகளும் திங்கள்கிழமை இயங்கத் தொடங்கின. காரைக்கால் கடைத்தெருவும் வழக்கம்போல மக்கள் நடமாட்டத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு வாரத்துக்குப் பின் காரைக்கால் இயல்பு நிலைக்குத் திரும்பியது.