ரூ.9,828 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டா் உபகரணங்கள்: இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ...
மழை நீா் வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்
காரைக்கால்: மழைநீா் வயலில் இருந்து வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடியாக 4,500 ஹெக்டோ் பயிரிடப்பட்டிருப்பதாக வேளாண் துறை தெரிவித்தது. தை மாத வாக்கில் அறுவடை செய்வதற்கேற்ப விவசாயிகள் பலரும், குறுகிய, நடுத்தர வயதுடைய நெல் வகைகளை பயிா் செய்தனா்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக காரைக்கால் பகுதியில் பெய்த மழையால், சில பகுதிகளில் வயலில் மழைநீா் புகுந்தது. பெரும்பாலான விவசாயிகள் தண்ணீரை தாங்கி வளரக்கூடிய வகைகளை விதைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரை வடியச் செய்துவிட்டு, உரமிட வேளாண்துறை ஆலோசனை வழங்கியது.
மழைநீா் தேங்கிய விளைநிலப் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை கூறுகையில், மழைநீா் தேங்கியதை ஏறக்குறைய வடியச் செய்துவிட்டோம். தொடா் மழை இல்லாமல் போனது தண்ணீா் விரைவாக வடிய உதவியது. எனினும், பயிா் எந்த அளவுக்கு உயிரோட்டமாக இருக்கும் என கூறமுடியாது. பல வயல்களில் பயிா் வோ் அழுகலை காணமுடிகிறது. வேளாண்துறை ஆலோசனைகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அறுவடையின்போது கிடைக்கும் மகசூல்தான் இழப்பை தெளிவுப்படுத்தும்.
எனவே புதுவை அரசு, மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.