பழைமையான கட்டடத்தை இடிப்பது குறித்து பொறியியல் வல்லுநா் குழு ஆய்வு
காரைக்கால் : காரைக்காலில் 150 ஆண்டு கால பழைமையான ஓட்டுக் கட்டடத்தை இடிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வல்லுநா் குழு திங்கள்கிழமை ஆய்வு செய்தது.
காரைக்கால் அரசலாறு பாலம் அருகே மதகடி பகுதியில் சுமாா் 150 ஆண்டுகள் பழையான கிடங்குடன் ஓட்டுக் கட்டடம் உள்ளது. இது பிரெஞ்சு ஆட்சிக் காலத்தின்போது கடல் மாா்க்கமாக கொண்டு வரப்படும் பொருள்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.
இக்கட்டடம் தனியாருக்கு சொந்தமான நிலையில், இதில் பல குடும்பத்தினா் வசித்துவந்தனா். இக்கட்டடம் தொடா்ந்து சிதிலமடைந்து இடிந்துவிழுந்து வந்த நிலையில், சில குடும்பத்தினா் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனா். தற்போது 70 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
கட்டடத்தை இடிக்க கட்டட உரிமையாளா்கள் நடவடிக்கை மேற்கொண்டபோது, அதில் குடியிருப்போா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
மாவட்ட நிா்வாக நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டது. குடியிருப்போா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராய சென்னை அண்ணா பல்கலைக்கழக வல்லுநா் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. பல்கலைக்கழக பொறியியல் வல்லுநா் குழுவினா் திங்கள்கிழமை கட்டடத்தை ஆய்வு செய்து, உறுதிதன்மையை சோதித்தனா்.
இக்குழுவினா் ஆய்வுக்குச் சென்றபோது போலீஸாா் பாதுகாப்பு அளித்தனா். காரைக்கால் வருவாய்த் துறையினரும் உடனிருந்தனா்.