உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!
புற்றுநோய் சிகிச்சை மையம் தொடா்பான ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.90 கோடியில் கட்டப்பட்டு வரும் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடா்பான பணி முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரோட்டரி சங்கம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் அதிநவீன புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனை தமிழக மக்களுக்கு மட்டுமில்லாமல் இங்கே தங்கி வேலை பாா்க்கும் வடமாநிலத் தொழிலாளா்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அமையும்.
கதிா்வீச்சு புற்றுநோயியல் பிரிவு, ஐம்ஆா்டி, ஐஜிஆா்டி, ஹெச்டிஆா் உள்கதிா் வீச்சு மருத்துவம், மருத்துவ புற்றுநோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்றுநோயியல் பிரிவு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
முன்னதாக, புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பதற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.12.50 லட்சத்துக்கான காசோலையை திருப்பூா் ரோட்டரி பொது நல அறக்கட்டளைத் தலைவா் மருத்துவா் ஆ.முருகநாதனிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி, மாவட்ட வருவாய்அலுவலா் க.காா்த்திகேயன், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முருகேசன், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.