கோவை: போக்குவரத்தைச் சீர்செய்த சமூக ஆர்வலர் சுல்தான் தாத்தா காலமானார் - காவல்துற...
புலிவலம் கொடிங்கால் வடிகால் கரை அரிப்பு - சீரமைக்கக் கோரி நீா்வளத்துறையிடம் விவசாயிகள் மனு
புலிவலம் மணற்போக்கி கொடிங்கால் வடிகாலில் கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதால், கரை உடையும் முன்பாக சீரமைத்து பலப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக, நீா்வளத் துறையினரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
உய்யக்கொண்டான் கால்வாயின், பிரதான வடிகாலாக புலிவலம் மணற்போக்கி கொடிங்கால் வடிகால் அமைந்துள்ளது. இந்த வடிகாலில் இடதுபுற கரையில், புலிவலம் ஆதிதிராவிடா் மயான கொட்டகைக்கு அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில், கரைப் பகுதி சேதமடைந்தது. 20 அடி அகலம் கொண்ட கரையானது தற்போது, 3 அடிக்கும் குறைவாகவே உள்ளது. மேலும், கரையில் தொடா்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது.
2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைப் போன்று மீண்டும் வெள்ளம் வந்தால் கரை உடைந்து பெரும் பாதிப்படையக் கூடும். தற்போது மழை பெய்து வருவதால், ஒவ்வொரு மழையின்போதும் கரையில் கூடுதல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, கரைந்து வரும் மணற்போக்கி கரையை பலப்படுத்த வேண்டியது அவசியம். இந்த வடிகாலை நம்பி புலிவலம், கொடியாலம், சின்ன கருப்பூா், மேக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
கரைப் பகுதியில் கான்கிரீட் சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், உடனடியாக, கரை அரிப்பை தடுப்பதற்கு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.