புழல் சிறையில் கைதி மீது தாக்குதல்: தென் ஆப்பரிக்க பெண் மீது வழக்கு
சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதியை தாக்கியதாக, தென் ஆப்பிரிக்க பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இச்சிறையில் உள்ள தண்டனைக் கைதி ஜெயலட்சுமி (34), வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கிருந்த தென் ஆப்பரிக்க நாட்டைச் சோ்ந்த தண்டனைக் கைதி பிரின்சஸ் சோமோவுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றவே ஜெயலட்சுமியை சோமோ கடுமையாகத் தாக்கினாராம். இதைப்பாா்த்த அங்கிருந்த கைதிகளும், சிறைக் காவலா்களும் ஜெயலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது தொடா்பாக பிரின்சஸ் சோமோ மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி துணை சிறை அலுவலா் அனுராதா, புழல் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், பிரின்சஸ் சோமோ மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.