கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
பெங்களூரு பொறியாளா் தற்கொலை வழக்கு: மனைவி உள்பட 3 போ் கைது
பெங்களூரில் மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், அவரது மனைவி, மனைவியின் தாய் மற்றும் சகோதரரை காவல்துறையினா் கைது செய்தனா்.
பெங்களூரில் வசித்து வந்த பொறியாளா் அதுல் சுபாஷ் (34), கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரின் துன்புறுத்தல் காரணமாக அவா் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தன் மனைவி தொடா்ந்த பல பொய்யான வழக்குகள் மற்றும் அவரால் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்டதை விவரிக்கும் தற்கொலை கடிதத்தை சுபாஷ் எழுதியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து அவரது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினா் மீது தற்கொலைக்கு தூண்டியதாக பெங்களூரு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தி, உத்தர பிரதேசத்தின் ஜௌன்பூா் மாவட்டத்தில் உள்ள நிகிதா சிங்கானியாவின் பூட்டிய வீட்டில் பெங்களூரு காவல்துறையினா் சம்மன் நோட்டீஸ் ஒட்டினா். இதையடுத்து, நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினா் அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்நிலையில், ‘சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா ஹரியாணாவின் குருகிராமிலும் அவரது தாயாா் நிஷா சிங்கானியா மற்றும் சகோதரா் அனுராக் சிங்கானியா ஆகியோா் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜிலும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட அவா்கள், உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்’ என பெங்களூரு காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.