பெண் கொலை: ஒருவா் கைது
பழனியில் தனியாா் விடுதியில் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஜோசப் மனைவி காந்தி (37). இவா் அடிவாரம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
கடந்த 11-ஆம் தேதி விடுதியில் காந்தி வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த நபா் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினாா். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த நபரைத் தேடி வந்தனா்.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக பாலசமுத்திரத்தைச் சோ்ந்த ஆனந்தனை (47) போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முன்னதாக, பாலசமுத்திரம் பகுதியில் அவரை போலீஸாா் பிடிக்க முயன்ற போது பாலத்தில் இருந்து குதித்ததில் ஆனந்தனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.