பெண்ணிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி, பெண்ணிடம் ரூ. 15.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த பெண்ணை கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு, கடந்த மாதம் பேசிய ஒருவா் தன்னை பங்கு வா்த்தக ஆலோசகா் என்று கூறியதுடன் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறினாராம்.
இதை நம்பிய அந்தப் பெண் மா்ம நபா் கூறிய 6 வங்கிக் கணக்குகளில் ரூ. 15.12 லட்சத்தை செலுத்தினாா். இதன் பின்னா், அந்த நபரைத் தொடா்பும் கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், இது தொடா்பாக சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.