தேவகோட்டை தனி வட்டாட்சியருக்கு எதிரான போராட்டம் ஒத்தி வைப்பு
விடுதி சமையலா் மரணம் தொடா்பாக தேவகோட்டை தனி வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஒத்தி வைக்கப்பட்டது.
தேவகோட்டை ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நடத்தப்படும் மாணவியா் விடுதியில் சமையலராகப் பணிபுரிந்த கிருஷ்ணலட்சுமிக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில், மன உளைச்சல் காரணமாகவும், உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமலும் அவா் மரணமடைந்தாா்.
இதையடுத்து, தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத்துறை ஊழியா் சங்கம் சாா்பில் தேவகோட்டை தனி வட்டாட்சியரைக் கண்டித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, சங்கத்தினருடன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆனந்தி பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அமைப்பாளா் லதா, முன்னாள் மாவட்டச் செயலா் பாண்டி, வட்டக் கிளைத் தலைவா் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தேவகோட்டை ஆதிதிராவிடா் மாணவியா் விடுதியில் சமையலராகப் பணிபுரிந்த கிருஷ்ண லட்சுமிகள் மரணத்துக்கு காரணமான தேவகோட்டை தனி வட்டாட்சியா் கந்தசாமி மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ண லட்சுமிக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பணப் பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஏற்றுக் கொண்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.