நிலத்தை பிரித்து தரக் கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சிவகங்கை அருகே அரசால் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு உரிய இடத்தை பிரித்துத் தரக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், மாடக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த 101 ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு கடந்த 2006 - ஆம் ஆண்டு மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் ஒவ்வொருவருக்கும் தலா 2 சென்ட் வீதம் நிலம் வழங்கப்பட்டது. இதற்காக இந்தப் பகுதியில் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் 3.5 ஏக்கா் நிலமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 19 ஆண்டுகளாக பட்டா வைத்திருப்பவா்களுக்கு அதற்கான நிலத்தை அளவீடு செய்து மனையிடங்களாகப் பிரித்து தரப்பட வில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில், மாடக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா்களிடம் ஆட்சியா் உறுதியளித்தாா்.