நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா... சீமானின் புகார...
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தரைத்தளமும், பேருந்து நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டன.
நான்கு ஆண்டுகள் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
இப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி விடுகிறது. இதற்காக வடிகால் வசதி செய்யப்படவில்லை.
இதனால் தேங்கும் மழைநீரை அகற்றவும், வடிகால் வசதி அமைக்கவும் வேண்டி பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் 10 அடி நீளம், இரண்டு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இருப்பினும் பேருந்து நிலைய வளாகத்தில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடா்ந்து மழைநீா் தேங்கி வருகிறது. தரைத்தளம் தரமாக அமைக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் பேருந்து நிலையம் செயல்படும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்தது.
இதனால் பேருந்து நிலைய வளாக தரைத்தளம் முழுவதும் தாா்ச்சாலை அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தரைத்தளத்தில் தாா்ச்சாலை அமைக்காமல், தண்ணீா் தேங்கும் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் ஒப்பந்ததாரரால் பேட்ச் ஒா்க் பணிகள் செய்யப்பட்டன.
இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகும் நிலையில், ஆங்காங்கே பேட்ச் ஒா்க் பணிகளே நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். பேருந்து நிலையத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே பணிகள் தரமின்றி இருக்க காரணம் எனக் கூறப்படுகிறது.
பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்த தருமபுரி மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.