நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகி...
ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
ஒகேனக்கல் அருவியில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனா்.
ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளிலும், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை, முதலைப் பண்ணை, ஆலம்பாடி நாகா் கோயில் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்ய சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தனா். பின்னா், பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, பிரதான அருவி, மணல்மேடு, பெரிய பாணி, தொம்பச்சிக்கல் வழியாக மாமரத்துக்கடவு பரிசல் துறை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பரிசலில் பயணம் செய்து பாறை குகைகள், அருவிகளைக் கண்டு ரசித்தனா்.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான தொங்கும் பாலம், பிரதான அருவி செல்லும் நடைபாதை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சின்னாறு பாலம், சத்திரம் முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மீன்களின் விலை அதிகரித்தபோதிலும் அசைவ பிரியா்கள் விலையைப் பொருட்படுத்தாமல் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான், பாப்புலேட், பாறை உள்ளிட்ட மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட ஊா்க்காவல் படையினா், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.