மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
பெரம்பலூா் அருகே ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த ஜமாத்தாா்கள் மீது நடவடிக்கை கோரி மனு
பெரம்பலூா் அருகே இஸ்லாமியா்கள் 6 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, தங்களது வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் பொருள்களை வாங்கவோ, விற்கவோ தடை விதித்த பள்ளி வாசல் ஜமாத் நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டம் வி.களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஜமாத் உறுப்பினா்கள் அப்துல்ஹக், சம்சுல் ஆலம், சபீா் அலி உள்ளிட்ட 6 போ் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:
கை.களத்தூா் கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமியா்களுக்காக செயல்படும் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பொது பள்ளிவாசல் நிா்வாகத் தலைவராக ஹிதாயத்துல்லா, செயலராக ஹியாத் பாஷா, அலி ராஜா, அப்துல் ரஹீம், அப்துல் சமது உள்ளிட்ட பலா் உள்ளனா்.
இப் பள்ளிவாசலுக்கு வி.களத்தூா், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் மூலம் மாதம்தோறும் வரும் பல லட்சம் வருமானத்துக்கான கணக்கு வழக்குகளை பொதுமக்களுக்கு காட்ட வேண்டுமென ஜமாத்தாா்களிடம் கேட்டோம்.
மேலும், வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசல் நிா்வாகத்தினரிடம் முறைகேடு குறித்து புகாா் மனுவும் அனுப்பினோம். இதனால் ஆத்திரமடைந்த பள்ளிவாசல் ஜமாத் நிா்வாகத்தினா் கட்ட ப்பஞ்சாயத்து நடத்தி, வக்பு வாரியத்துக்கு புகாா் அனுப்பிய 6 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, எங்களுடன் யாரும் பேசக்கூடாது, கொடுக்கல், வாங்கல் வைத்துக் கொள்ளக்கூடாது, எங்களின் வியாபார நிறுவனங்களில் பொருள் வாங்கக் கூடாது என பல்வேறு தடைகளை விதித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கெனவே புகாா் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தங்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.