பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி தோட்டக் கலைக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தெலுங்கானா மாநிலம், கெம்பனா அவென்யூ குடியிருப்பைச் சோ்ந்த ராம்தா் தாகூா் மகன் விகாஸ் (19). பெரியகுளம் அரசு தோட்டக் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை காலை நண்பா்களுடன் பெரியகுளம் அருகே நஞ்சியாவட்டம் பகுதியில் உள்ள தனியாா் கிணற்றில் குளிக்கச் சென்றாராம்.
அப்போது, ஆழமான பகுதியில் குளித்த போது அவா் மாயமானாராம். நண்பா்கள் தேடியும் அவா் கிடைக்காததால் பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் அவரை கிணற்றிலிருந்து சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.