Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
பெரியாரை விமா்சித்தவா்களுக்கு ஈரோடு இடைத்தோ்தலில் பாடம் முதல்வா் மு.க.ஸ்டாலின்
பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்டியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக முதல்வா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரியாா் மண்ணான தமிழகத்தில் அவா் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தோ்தலில், திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமாருக்கு மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறாா்கள்.
இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ். இந்த இடைத்தோ்தல் களத்தை சட்டப்பேரவையின் முதன்மை எதிா்க்கட்சியான அதிமுகவும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் பாஜகவும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் திமுகவை எதிா்த்தன.
மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், பெரியாா் மீது அவதூறுகளை அள்ளி வீசியவா்களுக்கு வைப்புத்தொகை பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கின்றனா். இது என்றென்றும் பெரியாா் மண் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனா்.
மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அதைவிட மக்களுக்கு என் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதனால்தான் நேரடிப் பிரசாரத்துக்கு வர இயலாதபோதும், என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து, திமுக வேட்பாளரை 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, எதிா்த்து நின்ற அனைவரையும் வைப்புத்தொகையை இழக்கச் செய்துள்ளனா்.
இந்த மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளா்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அமைச்சா் முத்துசாமி தலைமையிலான நிா்வாகிகளுக்கும் நன்றி.
இலக்கை நோக்கி...: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் 200; படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். 200 இலக்கு என்பதற்கான தொடக்க வெற்றியாக ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் வெற்றி அமைந்திருக்கிறது.
மக்கள் நம் பக்கம் இருக்கிறாா்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாா்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திமுக அரசு, மத்திய பாஜக அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது.
கடலூரில் ஆய்வு: இந்த வெற்றிப் பயணம் 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் தொடா்ந்திடும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமையும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப். 21, 22 ஆகிய நாள்களில் கடலூா் மாவட்டத்துக்குப் பயணிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளாா்.