பேரவை ஜனநாயகத்தை அழிக்க முயற்சி: அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு
சென்னை: சட்டப்பேரவை என்னும் ஜனநாயக நாற்றங்காலை தழைக்கவிடாமல் அழிக்கும் பணியை திமுக அரசு செய்வதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடா் இதுவரை இல்லாத வகையில் இரு நாள்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. விடுதலைக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீா்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடா் 2 நாள்கள் மட்டுமே நடைபெற்றது இதுவே முதல் முறை.
அதேபோல், நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக 18 நாள்களுக்கு மட்டும் தான் பேரவை கூடியிருக்கிறது. கடந்த 72 ஆண்டுகளில் மிகக்குறைந்த நாள்களுக்கு சட்டப்பேரவை நடைபெற்ற ஆண்டும் இதுதான். அதிலும், ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட்ட 3 நாள்களையும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் புகழேந்தியின் மறைவு மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்ட நாளையும் கழித்து விட்டால், மொத்தம் 14 நாள்கள் மட்டும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அதிலும், துறை மானியக் கோரிக்கைகள் மீது 8 நாள்கள் மட்டுமே விவாதம் நடந்துள்ளது.
தமிழக அரசில் மொத்தம் 55 துறைகள் உள்ளன. அவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது வெறும் 8 நாள்களில் விவாதம் நடத்தப்பட்டால், அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கும்? சட்டப்பேரவைகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள். அங்கிருந்துதான் ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், நாற்றங்கால்களையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியைத் தான் திமுக அரசு செய்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.