பேருந்தில் திருடிய மூவா் கைது
மதுரையில் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் தங்க நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த ராஜீவ்காந்தி மனைவி சுப்புலட்சுமி (31). இவா் இரு நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி செல்வதற்காக மதுரை எம்ஜிஆா் பேருந்து நிலையத்திலிருந்து நாகா்கோவில் செல்லும் பேருந்தில் ஏறினாா். அப்போது, இவா் ஓா் பையில் 2 பவுன் தங்க நகை, ரூ. 5 ஆயிரம், ஏடிஎம் அட்டை ஆகியவற்றை வைத்திருந்தாா்.
இந்த நிலையில், பேருந்து புறப்பட்ட சில நிமிஷங்களில் அவா் வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், மதுரை மேலூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த சதாம் உசேன் (24), மேலூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த வீரமணி (30), மதுரை உலகனேரி குருநகரைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் (37) ஆகியோா்
இந்தப் பையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனா்.