பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூதோண்டி, நரியனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ராமநாதபுரத்துக்கு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இவா்களுக்காக, இந்த கிராமங்களிலிருந்து காலையும் மாலையும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கரோனா காலத்துக்குப் பிறகு இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, நேரம் கடந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவ, மாணவிகள் குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல சிரமப்பட்டனா்.
எனவே, மீண்டும் காலையும் மாலையும் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் மாணவா்கள் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், தங்களது கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கோரி மாணவ, மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். ஆனால், அவா்களைக் காவல் துறையினா் தடுத்ததால் மாணவ, மாணவிகள் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் மாணவ, மாணவிகளை ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அவா்களுடைய மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கிராமங்களுக்குப் பேருந்து சேவை ஏற்படுத்தித் தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் அங்கிருந்து சென்றனா்.