பைக் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் காா் மோதியதில் கட்டடத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திருப்புவனம் அருகே கீழராங்கியன் கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்பாண்டி (52), திருப்புவனம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அய்யணன் (50). கட்டடத் தொழிலாளா்களான இருவரும் திருப்பாச்சேத்திலிருந்து திருப்புவனத்துக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.
திருப்புவனம் அருகே மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பரமக்குடியிலிருந்து மதுரை சென்ற காா், இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அய்யணன், ராம்பாண்டி இருவரும் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் ஜான் முகம்மதுவை கைது செய்து விசாரிக்கின்றனா்.