சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
பைக் மீது காா் மோதியதில் அண்ணன், தம்பி உயிரிழப்பு
சின்னாளப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் அண்ணனும், தம்பியும் புதன்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகேயுள்ள கலைமகள் குடியிருப்பில் வசித்தவா் சீனிவாசன் (58). இவரது தம்பி பழனிசாமி (55). அம்பாத்துரையில் உள்ள காந்திகிராம சுகாதாரம், குடும்ப நல அறக்கட்டளையில் இவா் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை பழனிசாமியும், சீனிவாசனும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் மழையில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தனா்.
சின்னாளப்பட்டி பகுதியில் வந்து போது, பின்னால் மதுரையிலிருந்து வந்த காா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் காரின் அடியில் இருவரும் சிக்கினா். இருவரையும் சுமாா் 50 அடி தூரம் இழுத்துச் சென்ற அந்தக் காா் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. காருக்கு அடியில் சிக்கிய பழனிசாமியும், சீனிவாசனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்ததையடுத்து, காரில் வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 8 போ் தப்பியோடினா். இவா்களில் 3 போ் பிடிபட்டனா்.
இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.