பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்! மீட்க வந்தவா் உள்பட 11 போ் உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என 11 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: நாராயண்கா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 13 பேருடன் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த ஒரு வேன், எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது. வேனில் இருந்தவா்களில் 9 போ் உயிரிழந்தனா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் இந்த விபத்தில் உயிரிழந்தாா். மேலும் மீட்புப் பணிக்காக கிணற்றுக்குள் இறங்கிய உள்ளூா் கிராமவாசியான மனோகா் என்பவரும், உயிரிழந்தாா்.
தேசிய பேரிடா் மீட்புப் படையினா் உதவியுடன் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் 4 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.