பொங்கல் தொடா் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
பொங்கல் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டதால், கோவையில் கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. முன்னதாக, கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் மாணவா்கள், தங்கி வேலை செய்யும் தொழிலாளா்கள் ஏராளமானோா் 12-ஆம் தேதி முதலே தங்களது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாட பேருந்துகள், ரயில்கள் மூலமாக புறப்பட்டுச் சென்றனா்.
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் தினத்தையொட்டி, ஜனவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாநகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. இதனால், கடை வீதிகள், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வழக்கமாக, வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படும் அவிநாசி சாலை, திருச்சி சாலையில் குறைவான அளவே வாகனங்கள் சென்று வந்தன.
இதேபோல, மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியான உக்கடம், டவுன்ஹால், பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடா் வீதி, காந்திபுரம் 100 அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
வாகன நிறுத்தங்கள் நிரம்பின...
பொங்கல் பண்டிகைக்கு வெளியூா் செல்ல கோவை சிங்காநல்லூா் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சூலூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கரூா், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜனவரி 12 முதல் 500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், பேருந்து நிலையங்களின் அருகே இருந்த இருசக்கர வாகன நிறுத்தங்களில் வெளியூா் செல்வோா், தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சென்ால் வாகன நிறுத்தங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.