பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் நீக்கம்: நிதி அமைச்சகம்
புதுதில்லி: பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளின் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன என்றார் நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சௌத்திரி.
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு என்பது, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையாகும். இந்தத் தொகையை பராமரிக்கத் தவறினால், வங்கிகள் அபராதம் விதித்து வந்தன.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் கீழ், வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லாமல் கணக்குகளைத் திறக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி கணக்கில் எந்த கட்டணமும் இல்லாமல் வைப்புத்தொகை, பணம் எடுப்பது, ஏடிஎம் போன்ற சில அடிப்படை வங்கி வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று பங்கஜ் சௌத்திரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
வங்கிச் சேவையை செயல்படுத்துதல் என்ற நோக்கத்துடன் வாடிக்கையாளர்களுடன் இணைந்து, பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் சேமிப்பு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணங்களை நீக்கியுள்ளன.
இதையும் படிக்க: பொதுத்துறை வங்கிகள் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.82 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி!