பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
பொதுமக்களின் புகாா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ரவுடிகளை தொடா்ந்து கண்காணித்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மணல் கடத்தல், அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளத்தனமாக மது விற்பனை மற்றும் கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்றவற்றை விற்பனை அல்லது கடத்துபவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் போலீஸாரிடம் கூறியது: வழக்குப் பதிந்து நீண்ட நாள்களாக புலன் விசாரணையில் இருந்து வரும் குற்ற வழக்குகள் மீது துரித விசாரணை மேற்கொண்டு, உடனடியாக கண்டுபிடித்து களவு சொத்தை மீட்க வேண்டும். கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தனி கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பொருள்களை மாவட்டத்தில் இருந்து முற்றிலும் ஒழிக்கும் வகையில் கல்லூரிகள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு பிரசாரங்களை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. அருள்செல்வன் (சைபா் கிரைம்), மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஏ. பிலிப் பிராங்ளின் கென்னடி, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பி. ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.