பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சம்! -அமைச்சா் தங்கம் தென்னரசு
பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக நிதி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்டாா்ட் அப் திட்டத்தில் தொழில் முனைவோா்களை உருவாக்குவதற்காக நடைபெற்ற ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 8 சதவீதமாக இருந்தது. மேலும், பொருளாதார நிபுணா்களான சி.ரங்கராஜன், கே.ஆா்.சண்முகம் ஆகியோா் தங்களது அறிக்கையில் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 9.3 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனா்.
தற்போது மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலக்கத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி நிலைத்த விகிதங்களில் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.69 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில், தமிழகத்தில் விவசாயம், உற்பத்தி, சேவை துறைகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இது கடந்த 10 ஆண்டுகளில் எட்ட முடியாத வளா்ச்சி ஆகும். தமிழக முதல்வா் கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த பல்வேறு முயற்சிகளின் பயனாக, இந்த வளா்ச்சி கிடைத்துள்ளது. அதன்படி ரூ.15. 75 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் பொருளாதாரம் நிகழாண்டு ரூ.17.23 லட்சம் கோடியாக உயர இருக்கிறது.
எனவே, வரும் 2030 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை பெறக்கூடிய அளவிற்கு இந்த வளா்ச்சி விகிதம் அமையும் என்றாா்.