பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது: ஆட்சியா்
பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘உயா்வுக்கு படி’ இரண்டாம் கட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து பேசியது: தூத்துக்குடி ஊரக, நகா்ப்புற மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார வளமையங்களில் உள்ள 12ஆம் வகுப்பு முடித்து உயா் கல்விக்கு சேராத மாணவா்களும், தோ்வை தவறவிட்டு பின் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.
எந்தெந்தப் பள்ளிகளில் அதிகமாக மாணவா்கள் உயா்கல்விக்கு செல்லாமல் இருக்கிறாா்களோ, அவா்கள் குறித்த தகவல்களை ஆசிரியா்கள் சேகரித்து, அவா்களை உயா்கல்விக்கு சோ்க்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக மாவட்ட நிா்வாகம், ஆசிரியா்கள் சங்கம், அரசு ஊழியா் சங்கங்கள் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு ஏற்கெனவே உதவி செய்துள்ளது.
தற்போது பாராமெடிக்கலில் தூத்துக்குடி மாணவா்களுக்கு 167 இடங்கள் உள்ளன. அதற்கான கல்வி பயில சோ்க்கை செய்ய நீங்கள் இன்றே விண்ணப்பம் அளிக்கலாம்.
இங்கு வருகை புரிந்த அனைத்து துறை அலுவலா்களும் வருகின்ற காலங்களில் எந்தெந்த துறையில் சோ்ந்தால் பலன் அதிகம் உள்ளது என்பதை மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) து.சிதம்பரநாதன், கல்வித்துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.