கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
போடி நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் தா்னா
போடி நகா்ப் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக் கடையை அகற்றுவதற்கு நகராட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், போடி நகராட்சியில் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகா்மன்ற துணைத் தலைவி கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணையா் பாா்கவி, பொறியாளா் குணசேகரன், மேலாளா் முனிராஜ், சுகாதார அலுவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டத்தில் திமுக உறுப்பினா்கள் உள்ள வாா்டுக்கு மட்டும் முன்னுரிமை தருகிறீா்கள் என பாஜக உறுப்பினா் மணிகண்டன் குற்றம்சாட்டினாா். இதற்கு அனைத்து வாா்டுகளிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். குறைகள் அதிகமாக இருக்கும் வாா்டுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என நகா்மன்றத் தலைவி பதிலளித்தாா்.
பாஜக உறுப்பினா் கூறியதற்கு திமுக உறுப்பினா்கள் ராஜா, ராஜசேகா் ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது, நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி தலையிட்டு அமைதிப்படுத்தினாா்.
இதையடுத்து, போடி நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலான இடத்தில் மதுக்கடை அமைக்க நகராட்சி சாா்பில் அனுமதி வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இந்த மதுக் கடையை அகற்ற நகா்மன்றம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் பாஜக உறுப்பினா்கள் மணிகண்டன், சித்ராதேவி ஆகியோா் நகா்மன்றத் தலைவி இருக்கைக்கு முன்பாக தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
அப்போது திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜசேகா், ராஜா, பிரபாகரன், தனலட்சுமி, சங்கா் உள்ளிட்டோா் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். காவல் துறையை வரவழைத்து பாஜக உறுப்பினா்களை வெளியேற்ற வேண்டும், அவா்களை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துப் பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது, 1 முதல் 54 வரையிலான நகா்மன்ற கூட்டப் பொருள்களில் ஆட்சேபத்துக்குரியவை தவிர மற்றவை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்து கூட்டம் முடிந்ததாக நகா்மன்றத் தலைவி அறிவித்தாா். தேசிய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து பாஜக உறுப்பினா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
கூச்சல் குழப்பத்தால் பெண் உறுப்பினா்கள் சிலா் தங்களுக்குப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனா்.
முன்னதாக திமுக உறுப்பினா்கள் வெங்கடேஸ்வரன், மகேஸ்வரன், மொக்கச்சாமி, ராாஜா ஆகியோா் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனா். இதற்கு உரிய நவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவி கூறினாா்.